* நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மிகப்பெரிய திட்டம் ஒன்று வரவிருப்பதாக சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்புகளை உருவாக்க ரூ.100 லட்சம் கோடியில் கதி சக்தி திட்டம் தொடங்கப்படும் என்றார்.


* தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் கோட்டையில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கியும் கெளரவித்தார்.


* தியாகிகள் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சுதந்திர தினவிழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


* சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. நிதி, வேளாண்மை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது.


* பட்டியலினத்தவர்களை இழிவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


* அரசின் அயராத முயற்சியால் பல துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஆளுநர் பன்வாரி லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.


* ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைப்பு அதிகாரத்தை கைப்பற்றியது. இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டார்.


* தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலும் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


* காபூலை தலிபான்கள் சுற்றிவளைத்த நிலையில், அங்கு வசித்த இந்தியர்கள் 129 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்.


*  ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.


* இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில்  ஓலா நிறுவனம் தனது மின்சார  ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தது. அதன்படி எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாயாக உள்ளது. அதேபோல் எஸ் 1 ப்ரோ வகை ஸ்கூட்டரின் விலை 1,29,999 ரூபாய் ஆக உள்ளது.


* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1896 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 225 பேரும், சென்னையில் 216 பேரும், ஈரோட்டில் 146 பேரும், சேலத்தில் 97 பேரும், செங்கல்பட்டில் 96  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.    


* செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே  மாடம்பாக்கத்தில் உள்ள பழமையான தேனுபுரீஸ்வரர் கோயில் முதல் முறையாக பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டார். சுஹாஞ்சானவிற்கு 27 வயதாகிறது. இவர்  இந்துசமய அறநிலையத்துறை கோயிலில் ஓதுவாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பொறுப்பாக ஆடி ரஹானே அரைசதம் அடித்தார்.