எச்.டி.எஃப்.சி வங்கியுடன் அதன் தாய் நிதி நிறுவனம் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
எச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பு:
இந்திய வரலாற்றில் இரு நிறுவனங்களின் இணைப்பால் நடைபெற்ற மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது எச்.டி.எஃப்.சி வங்கி. எச்டிஎஃப்சி எனும் பெயரை தற்போது பலரும் வங்கி எனும் அடையாளத்தால் அறிந்தாலும், அதன் தாய் நிறுவனம் என்பது ஹவுசிங் பைனான்ஸ் தான். வழக்கமாக தாய் நிறுவனங்களுடன் தான் அதன் கிளை நிறுவனங்கள் இணைக்கப்படும். ஆனால், எச்.டி.எஃப்.சி குழுமம் தனது தாய் நிறுவனமான நிதி நிறுவனத்தை, தனது வங்கியுடன் இணைத்துள்ளது. இதன் மூலம், நாட்டின் முதல் வீட்டு நிதி நிறுவனம் இனி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
பரந்து விரிந்த கிளைகள்:
இந்த இணைப்பின் மூலம் உலகின் அதிக மதிப்புமிக்க வங்கிகளில் முதல்முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பிடித்துள்ளது. இது அமெரிக்க மற்றும் சீனவை சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய சவாலாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. புதிய HDFC வங்கி நிறுவனம் சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் - இது ஜெர்மனியின் மக்கள்தொகையை விட அதிகம் ஆகும். அதோடு இந்த வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 8,300 க்கும் மேல் அதிகரிக்கும். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தை கடக்கும்.
172 பில்லியன் டாலர்கள் மதிப்பு:
எச்டிஎஃப்சி பேங்க் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணைப்பின் மூலம், உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, ஜேபி மோர்கன் சேஸ் & கோ., இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்குப் பின்னால், பங்குச் சந்தை மூலதனத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் கடன் வழங்கும் நிறுவனமாக எச்.டி.எஃப்.சி உருவாகியுள்ளது. ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின் படி, அந்த வங்கியின் மொத்த மதிப்பு சுமார் 172 பில்லியன் டாலர்கள் ஆகும்.
நிகர லாபம்:
கடந்த மார்ச் மாத இறுதி வரையில் தற்போது இணைக்கப்பட்ட இரு நிறுவனங்களின் வர்த்தகம் ரூ.41 லட்சம் கோடி ஆகும். இணைப்பின் மூலம், நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ. 4.14 லட்சம் கோடியாக இருக்கும். மார்ச் 2023 இன் இறுதியில் இரு நிறுவனங்களின் கூட்டு லாபம் சுமார் ரூ. 60,000 கோடி ஆகும்.
பயனாளர்களுக்கான நற்செய்தி:
எச்.டி.எஃப்.சியின் வங்கி மற்றும் நிதி நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கியிலிருந்து காப்பீடு மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் பரஸ்பர நிதிகள் வரை முழுமையான நிதிச் சேவைகளை வழங்க உள்ளது. இனி வீட்டுக் கடன்களும் எச்.டி.எஃப்.சி வங்கி மூலமே வழங்கப்பட உள்ளது. இதனால், பயனாளர்கள் தங்களுக்கான நிதிச்சேவைகளை முழுமையாக ஒரே இடத்தில் பெறமுடியும்.