கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு மூக்கில் ரத்தம் வழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து நடத்தும் பாதயாத்திரை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, குமாரசாமி மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.


செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு: கோல்ட் ஃபிஞ்ச் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், குமாரசாமி சட்டையில் ரத்தத்தில் படிந்திருந்தது .


அவருக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று நடைபெற்ற பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரு முதல் மைசூரு வரை பாத யாத்திரை நடத்தவும், சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.


கர்நாடக அரசியல் நிலவரம்: கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி. கே. சிவகுமாரும் பதவி வகித்து வருகின்றனர்.


சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தால் மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த வந்த போதிலும், பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றிபெற்றது.


2 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் குமாரசாமிக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் வழங்கப்பட்டது.