உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டுள்ளது. இதில், 116 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என கூறப்படுகிறது.


ஹத்ராஸில் நடந்தது என்ன? இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.


இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.


மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் கூறியுள்ளார்.


இரங்கல் தெரிவித்த தலைவர்கள்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


ஹத்ராஸ் கூட்ட நெரிசல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உ.பி அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.


இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் ஆன்மீக சொற்பொழிவின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.


அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அரசும் நிர்வாகமும் காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.


இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவரும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.