உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு (சத்சங்) நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கின்றனர்.


100க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த இந்த சம்பவத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. போலே பாபா என்ற சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்த மக்கள், அவரது காலடி மண்ணை எடுக்க முற்பட்டுபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.


'போலே பாபா' சாமியாருக்கு குறிவைக்கும் போலீஸ்: இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து அலிகார் காவல்துறை ஆய்வாளர் ஷலப் மாத்தூர் கூறுகையில், "கைது செய்யப்பட்ட 6 பேரும் சத்சங்கத்தில் சேவகர்களாக (தன்னார்வலர்களாக) பணியாற்றி வருபவர்கள். முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். முக்கிய குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுகருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பிக்கப்படும்.


விசாரணையை அடுத்து கைது செய்வோம். தேவைப்பட்டால் போலே பாபாவை விசாரிப்போம். ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தில் அவருக்கு பங்கு இருக்கிறதா என்று கூறவோ, கருத்து தெரிவிக்கவோ இப்போதைக்கு முடியாது.


எஃப்ஐஆரில் அவரின் பெயர் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் ஏற்பாட்டாளர்களே குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதி ஏற்பாட்டுக் குழுவினரால் பெறப்பட்டது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


யார் இந்த போலே பாபா?


சூரஜ் பால் சிங் என்ற நபர் , ஆன்மீக சொற்பளிவாளராக மாறியதை தொடர்ந்து, தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என மாற்றிக் கொண்டார். இவரின் பக்தர்கள், போலே பாபா என அழைக்கின்றனர். இவர் உத்தர பிரதேசத்தில் காவல் துறையின் உள்ளூர் உளவு பிரிவில் பணியாற்றியிருக்கிறார். 


அப்போது, இவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக மிக நீண்ட காலம் சிறை தண்டனையும் அனுபவித்திருக்கிறார். பின்னர், விடுதலையான பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று, மீண்டும் காவல்துறையில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு, ஆக்ராவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து, சொந்த கிராமமான பகதூர் பூருக்கு சென்று தீவிரமாக ஆன்மிக பணியை தொடங்கியிருக்கிறார்.