பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய ராணுவத் தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு வழங்கிய, அதாவது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா என்கிற ஜோதி ராணி.
ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தது எப்படி.?
‘டிராவல் வித் ஜோ‘, ‘நோமடிக் லியோ கேர்ள் வான்டரர்‘ என்ற பெயர்களில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்தவர்தான் 33 வயதான ஜோதி மல்ஹோத்ரா. இவர் பாகிஸ்தானுக்கு செல்ல ஏஜென்ட் விசா பெறும்போது, இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக, பாகிஸ்தானில் உளவு நிறுவனங்களிடம் இவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
ரஹீம் மூலமாக, பாகிஸ்தானில் உள்ள அலி அஹ்வான் என்பவரை ஜோதி சென்று சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த எஹ்சான்-உர்-ரஹீம் தான் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவால் நாடு கடத்தப்பட்டவர்.
இந்நிலையில், ஜோதி பல்வேறு இடங்களுக்கு சென்று, அதனை வீடியோவாக பதிவு செய்து, அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததால், பாகிஸ்தானுக்கும் சென்று வீடியோ எடுப்பது போன்று, அங்கு இருந்தவர்களுடன் வலுவான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
அவர்களுடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் மூலம் தொடர்ந்து டச்சில் இருந்துள்ளார். மேலும், சந்தேகம் ஏற்படாமலிருக்க, இவர் பாகிஸ்தானில் தொடர்பில் உள்ள நபர்களின் பெயர்களை இந்து பெயர்களில் பதிவு செய்திருந்ததாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல முறை பாகிஸ்தானிற்கு பயணம் செய்து தகவல் பகிர்வு
இவர், டிராவல் ப்ளாக்(Blog) என்ற பெயரி பல முறை பாகிஸ்தானிற்கு பயணம் செய்து, அங்கு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து, ராணுவம் உள்ளிட்ட இந்தியாவிற்கு எதிரான பல தகவல்களை பகிர்ந்தகொண்டதாகவும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு தளவாடங்கள், கட்சிக் கூட்டங்கள், மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட தகவல்களை இவர் பகிர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு முன் அங்கு சென்ற ஜோதி
இதனிடையே, அதிர்ச்சி தரும் விதமாக, கடந்த ஜனவரி மாதம் பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்கு சென்று, அதைனைத் தொடர்ந்து ஜோதி பாகிஸ்தானுக்கும் சென்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, கடந்த சில மாதங்களில் பர்மா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்ற ஜோதி, அங்கு பாகிஸ்தான் உளவாளிகளை சந்தித்து, ரகசிய தகவல்களை பகிர்ந்து, பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஜோதி - அவர் மீதான வழக்குகள் என்ன.?
இதற்கிடையே, ஜோதி மல்ஹோத்ராவின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்தபோது, அவர், அவைகள் மூலம் பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தியாவிற்கு எதிராக ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், ஜோதி மல்ஹோத்ரா மீது, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரோடு, கல்லூரி மாணவரான தேவேந்தர் சிங், பாதுகாப்பு காவலர் நௌமன் இலாஹி, குசாலா, பானு நஸ்ரீனா, யாமீன் முகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.