Haryana Violence: ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது விடுமுறையில் இருந்த எஸ்.பி. வருண் சிங்லா மீது அதிரடியாக அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹரியானாவில் பதற்றம்:
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இந்நிலையில், தான் நூ மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி இருபிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது. மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். , பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கைமீறி சென்றிராத வகையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இணையம் முடக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 176 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வன்முறையால் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
எஸ்.பி. பணியிட மாற்றம்:
இவ்வளவு கலவரம் நடந்துக் கொண்டிருக்க, நூ மாவட்ட எஸ்.பி வருண் சிங்லா அப்போது விடுமுறையில் இருந்துள்ளார். இதனால் அம்மாநில அரசு வருண் சிங்லாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இவரை நூ மாவட்டத்தில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள பீவானி மாவட்டத்திற்கு மாற்றம் செய்துள்ளது. இவருக்கு பதிலாக நூ மாவட்ட எஸ்.பியாக நரேந்திர பீஜார்னியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நூ மாவட்டம் எஸ்பியாக பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2021ஆம் ஆண்டு வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் ஜூலை 31ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. நுஹ் மாவட்டத்தில் நடந்த பேரணியில் மோனு மானேசர் பங்கேற்பதாக வதந்தி பரவியதே வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இரண்டு முஸ்லிம்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மோனு மானேசர். இவரை கைது செய்ய போலீசார் தீவிரமான முயற்சி எடுத்தும் பயன் அளிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட மோனு மானேசர், ஹரியானவில் நடந்த பேரணியில் பெருந்திரளாக இந்துக்கள் பங்கேற்க வேண்டும் என வீடியோக்கள் மூலம் அழைத்து விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.