அசாமில் லாரி மீது மோதிய கார் விபத்தில் பொதுமக்களால் “லேடி சிங்கம்” என்றழைக்கப்பட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர் ஜுன்மோனி ரபா உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் லேடி சிங்கம்
அசாம் மாநில காவல்துறையைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா. 30 வயதான இவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஜுன்மோனி ரபா மாநிலம் முழுவதும் வசிக்கும் மக்களிடத்தில் பிரபலமானதோடு பேசுபொருளாகவும் மாறினார்.
கம்ரூப் மாவட்டத்தில் உள்ள தக்கிங்கானைச் சேர்ந்த ரபா கடந்த 2017 ஆம் ஆண்டு அசாம் காவல்துறையில் சேர்ந்தார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நாகோன் காவல்துறையில் சேர்க்கப்பட்டார். அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், கடந்தாண்டு தனது வருங்கால கணவரையே மோசடி குற்றச்சாட்டில் கைது செய்தார். இதன்மூலம் இந்தியா முழுவதுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் இந்த வழக்கில் ஜுன்மோனி ரபாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு பின் பணியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் பிஹ்பூரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ அமியா குமார் புயானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது தொகுதி மக்களை ரபா துன்புறுத்தியாக அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் பலியான ஜூன்மோனி ரபா
இப்படியான நிலையில் நாகோன் மாவட்டத்தில் உள்ள சருபுகியா கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை காரில் ஜூன்மோனி ரபா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி இவர் சென்ற கார் மீது மோதியது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரபாவின் உடலை கைப்பற்றி சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரபா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதிவு எண்ணைக் கொண்டிருந்த லாரியின் டிரைவர் தப்பியோடி விட்டார். லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அவர் ஏன் காவல் உடையணிந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் அசாம் நோக்கி பயணம் செய்தார் என்பது தெரியவில்லை. நாகோன் சிவில் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஜுன்மோனி ரபா கவுகாத்தியில் தகனம் செய்யப்பட்டது.
சந்தேகம் தெரிவிக்கும் குடும்பத்தினர்
ஆனால் ஜூன்மோனி ரபா மரணம் என்பது திட்டமிட்ட படுகொலை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையைக் கண்டறிய பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது மரணத்திற்கு சில மணி நேரம் முன்பு போலீஸ் அதிகாரிகள் குழு நாகோனில் உள்ள ஜுன்மோனியின் வீட்டில் சோதனை நடத்தி சுமார் ரூ. 1 லட்சம் பணத்தை கைப்பற்றியது.
ஆனால் இந்த பணம் கோழி மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் இருந்து பெறப்பட்டதாக ஜூன்மோனி ரபாவின் தாயார் விளக்கமளித்தார். மேலும் தன்மீது தாக்குதல் நடத்தியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் ரபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ரபா மரணம் அடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.