ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில்தான், நூ மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பெரும் மதக்கலவரமாக மாறியது.


ஹரியானாவை புரட்டிப்போட்ட மதக்கலவரம்:


மசூதிக்கு தீவைக்கப்பட்டதில் இமாம் ஒருவர் கொல்லப்பட்டார். பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை கைமீறி சென்றிராத வகையில், இன்று வரை இணையம் முடக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறுப்பிக்கப்பட்டது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 202 பேரை அம்மாநில  போலீசார் கைது செய்துள்ளனர். 


மணிப்பூரை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த கலவரத்தின் பின்னணியில் பெரிய திட்டம் இருப்பதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று பகீர் கிளப்பியுள்ளார். அம்பாலாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து பேசுகையில், "நூஹில் நடந்த வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டு 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பொடி வைத்து பேசும் பாஜக அமைச்சர்:


குன்றுகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்ட விதம், கட்டிடங்களின் மேற்கூரைகளில் கற்கள் சேகரிக்கப்பட்டிருப்பது ஆகியவை நூஹ் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதை காட்டுகிறது. இந்த வழக்கில் இதுவரை 102 எஃப்ஐஆர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட எவரையும் தப்பிக்க விட மாட்டோம் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.


இதன் பின்னணியில் பெரிய கேம் பிளான் இருந்திருக்கிறது. ஒவ்வொருவரின் கையிலும் லத்தி இருந்திருக்கிறது. இவை இலவசமாக வழங்கப்பட்டதா? இவற்றை யாரோ ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தோட்டாக்கள் சுடப்பட்டிருக்கின்றன. ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? விஷயத்தை ஆழமாக ஆராய்வோம்" என்றார்.


இதே கருத்தைதான், இவர், கடந்த செவ்வாய்க்கிழமையும் தெரிவித்திருந்தார். வன்முறை திட்டமிட்ட சதி என்றும் இதன் பின்னணியில் ஒரு மூளை இருந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நுஹ் காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர சிங் பிஜர்னியா வேறு விதமான கருத்தை தெரிவித்திருந்தார். "இந்த வன்முறைக்கு பின்னணியில் மாஸ்டர் மைண்ட் இருந்ததற்கான ஆதாரத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.


இதையும் படிங்க..


Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை


பல்வேறு தரப்பினர் சேர்ந்து இந்த கலவரத்தில் ஈடுபட்டிருப்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக கூறி, மதக்கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை ஹரியானா அரசு இடித்து வருகிறது.