பாம்பை கண்டால் படையே அஞ்சும் என்பது பழமொழி. சிறிய பாம்பை பார்த்தாலும் பதறி ஓடும் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 10 முறைக்கு மேல் கடிப்பட்டும் பாம்பை குழந்தை போல் கையாள்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


5,600 பாம்புகளை பிடித்த அதிசய மனிதர்:


ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பவன் ஜோக்பால். 28 வயது இளைஞரான இவர், பட்டு கலாம் கிராமத்தில் வசித்து வருகிறார். பாம்பு பிடிக்கும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், "ஏறக்குறைய 10 ஆண்டுகலாக கிராமப்புறங்களிலும் பிற இடங்களிலும் உள்ள மக்களின் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வருகிறேன்.


இதுவரை, 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். 10 முறைக்கு மேல் பாம்பு என்னை கடித்துள்ளது. சமீபத்தில், குட்டி நாகப்பாம்பு ஒன்றை பிடித்தேன். அது ஃபதேஹாபாத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள திறந்த பகுதியில் காணப்பட்டது. அங்கு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றினார்.


10 முறை கடிப்பட்டும் அசால்ட் செய்யும் இரும்புகோட்டை முரட்டு சிங்கம்:


சமீபத்திய வெள்ளத்தின் போது பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மரங்களில் தஞ்சமடைந்த பல பாம்புகளை பிடித்தேன். மீட்கப்பட்ட பாம்புகளை காடுகளில் விட்டுவிட்டேன்" என்றார். முழு நேர வேலையாக பாம்புகளை பிடிக்க தூண்டியது எது என்று கேட்டதற்கு, அவர் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.


"அப்போது, சுமார் 17 வயது இருக்கும். கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு ஒரு பாம்பு புகுந்தது. அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடியிருந்த மக்களும் அதைக் கொல்ல முயன்றபோது, ​​அந்த உயிரினத்துக்குத் தீங்கு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தினேன். நான் அதை காப்பாற்ற முயற்சித்தேன்.


ஆனால், அதற்குள் யாரோ பாம்பை அடித்து கொன்றனர். அந்த சம்பவம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு, டிஸ்கவரி சேனலைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் சிறிய பாம்புகளை காப்பாற்ற ஆரம்பித்தேன். பாம்புகளைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்து அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன்.


இப்போது என்னால் பாம்புகளை எளிதில் கையாள முடிகிறது. இதுவரை, 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். நாகப்பாம்பு உட்பட 10 முறை பாம்பு கடித்ததால் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை ஓநாய் பாம்பு கடித்தது. ஆனால், அது விஷமற்றது.


மக்கள் என்னை தொலைபேசியில் அழைக்கிறார்கள். நான் எனது குழுவுடன் அங்கு செல்வேன். நாங்கள் பாம்புகளை பிடித்து காட்டில் விடுகிறோம். எனது குழுவில் மேலும் மூன்று பேர் உள்ளனர். பாம்பை பிடிக்க செல்லும்போது, சிறப்பு கையுறைகள், குச்சிகள், காலணிகள், கொக்கி மற்றும் பிற பாதுகாப்பு கியர்களை எடுத்துச் செல்வோம். ஃபதேஹாபாத் மாவட்ட நிர்வாகம் எனது குழுவினர் செய்து வரும் சமூக சேவையை அங்கீகரித்து கடந்த காலங்களில் என்னை கவுரவித்துள்ளது" என்றார்.