அக்னிபத் திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது. 


அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 






இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.






 

இதன் எதிரொலியாக ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பீகார், உத்தர பிரதேச பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை போராட்டத்தால் நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க பீகாரின் 12 மாவட்டங்களில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து இணையதள சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

 

இதேபோல ஹரியானாவிலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மகேந்தர்கர் பகுதியில் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவைகள் மற்றும் அனைத்து எஸ்எம்எஸ் சேவைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.