Haryana Court: இஸ்லாமிய சட்டத்தின்படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், விருப்பமான நபரை திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் திருமணச் சட்டத்தின்கீழ் வராது என பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜாவித் என்ற 21 வயது இளைஞர் 16 வயது இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டதோடு, அவரது மனைவியும் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவும், தனது மனைவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் ஜாவித் என்பவர் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிபதி விகாஸ் பால், இஸ்லாமிய சட்டத்தின் படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார். மேலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கூட திருமணம் நடைபெறலாம் என கூறினார். திருமணத்தை பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டதால் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முகாந்திரம் இல்லை எனக் கூறி, ஜாவித் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி விகாஸ் பால் தீர்ப்பளித்துள்ளார்.
இஸ்லாமிய விதிப்படி, ``பருவமடைந்த ஒரு பெண் பெரியவர் (Adult) ஆகிவிட்டதற்கான சான்று. 15 வயது முதலே பெரியவராகக் கருதப்பட வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பருவமடைந்த இருவர் ஒருவரையொருவர் விரும்பும்பட்சத்தில் பெற்றோரின் விருப்பமும் அனுமதியும் இன்றி திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குழந்தைகள் திருமணம் சட்டம் என்பது குழந்தைகளுக்கு விவரம் தெரியும் முன்பே திருமணம், குடும்பம், குழந்தை என்று பெரிய சுமையை கொடுக்கக்கூடாது என்பதற்காக குழந்தை திருமணம் தடை சட்டம் 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்படியாக இருந்தது.
அதன்பேரில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 20 வயதுக்கு கீழ் உள்ள ஆண்களும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இஸ்லாமிய தனிநபர் சட்டங்களில் அடிப்படையில் 15 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் திருமணம் அல்ல என்ற பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.