ஹரியானாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியானாவுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.


மக்களவை தேர்தலை தொடர்ந்து நடைபெறும் முதல் மாநில தேர்தல் என்பதால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மீது இருந்தது. ஹரியானாவில் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, கட்சியின் வாய்ப்புகளை அச்சுறுத்தும் வகையில் தோன்றிய சாதி அரசியலை கடந்து பாஜக இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது.


பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:


தேர்தலுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பாக, முதலமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக நயாப் சிங் சைனியை புதிய முதலமைச்சராக கட்சி தலைமை நியமித்தது. 2019 தேர்தலில் கட்டார் தலைமையில் பாஜக போட்டியிட்டது.


ஆனால், கட்சி பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 2024 தேர்தலில் பெரும்பான்மையை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பாஜக மாநில தலைமையை மாற்றியது. கட்சியின் புதிய முகமாக சைனியை நியமித்தது. அதன் விளைவாக தற்போது பாஜக, ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.


பிரதமர் - முதலமைச்சர் சந்திப்பு:


இந்த நிலையில், ஹரியானாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார் முதலமைச்சர் நயாப் சிங் சைனி. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி என்னை சந்தித்தார்.


 






ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். வளர்ச்சியடைந்த  இந்தியா என்ற இலக்கை எட்ட ஹரியானா மாநிலத்தின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.