நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதன் வரலாறு, முக்கியத்துவம், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? அறிவியல் தினத்தில் என்ன மாதிரியான வாழ்த்துச் செய்திகளைக் கூறலாம் என்பவனவற்றைக் காண்போம்.
தேசிய அறிவியல் தின வரலாறு: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய வரலாறு தினத்தின் முக்கியத்துவம் என்ன? தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் இதுதான்: சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் "Global Science for global well being" என்ற கருப்பொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. நாளை (பிப்.28) விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன்னிலையில் விழா நடைபெறுகிறது.
2023 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் உலகளவில் இந்தியாவின் அங்கமும் அதன் முக்கியத்துவமும் வெகுவாக அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் யாருக்காகவும் காத்திருக்காமல் இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த தடுப்பு மருந்துகள் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் தின வாழ்த்துக் குறிப்புகள்:
* அறிவியல் வெறும் பகுத்தறிவின் தொண்டன் மட்டுமல்ல. அது காதல் மற்றும் தீவிர விருப்பத்தின் வழித்தோன்றலும்கூட. இனிய தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துகள்.
* மதத்தை விடுத்த அறிவியல் அங்கமற்றது. அறிவியலை விடுத்த மதம் கண்மூடித்தனமானது. இனிய தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துகள்.
* அறிவியல் என்பது மூடநம்பிக்கைக்கான தலைசிறந்த மாற்று மருந்து. இனிய தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துகள்.
* இன்றைய அறிவியல் நாளைய தொழில்நுட்பம். இனிய தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துகள்.
இதுபோன்ற சில வாழ்த்துக் குறிப்புகளைப் பகிரலாம்.
ராமன் விளைவு கண்டறியப்பட்டதின் பின்னணி தெரியுமா?
ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.
தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழப் பதிந்தது. இதற்காகப் பின்னாளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களில் ஒளி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்' (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.
தீவிர சிந்தனைகளும், ஏன் என்ற கேள்வியும் தான் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிநாதமாக இருக்கின்றன. பெரும்பாலான நேரம் இயற்கைதான் இதைத் தூண்டுகிறது.