இன்று மருத்துவர்கள் தினம்.  ஹாலிவுட் படங்களில் வந்த சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவே டாக்டர்களை நடக்கவிட்டும், நின்றுகொண்டிருக்கும் டாக்டருக்கு இறகு பொருத்தியும் சோஷியல் மீடியாக்களில் வாழ்த்துகள் பறக்கின்றன. ஆனால் இதையெல்லாம் கண்டு ரசித்து வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ள மருத்துவர்களுக்கு நேரம் இருக்கிறதா? இன்றும் கவச உடைக்குள் தன்னை புதைத்துக்கொண்டு பரபரப்பாய் செயல்படும் மருத்துவர்கள் அடுத்து வரும் அலைக்கு என்ன செய்யலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?




கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா என்ற புது வார்த்தைக்கு நாம் பழகிக்கொண்டு இருந்தோம். வெயிலில் பரவாது, காற்றில் பரவும் என ஏதேதோ செய்திகள் பரவிக்கொண்டு இருந்த நேரம் புதுவித தொற்றால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களுமே குழம்பிப் போய் இருந்தனர். செவிலியர்களும், தூய்மைப்பணியாளர்களும், மருத்துவர்களும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்தனர்.ஊரடங்கு போட்டு ஊரை வீட்டுக்குள் அமர வைத்தது அரசு. ஆங்காங்கே மரணங்கள், பாதிப்புகள் என தவித்தது உலகம். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பற்றி ஸ்பரிசம் கொடுக்கவும் முடியாத கொடூர நோயாக இருந்தது கொரோனா. பெற்றெடுத்த தாயோ, பெற்ற குழந்தையோ எந்த உறவையும் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய கையறு நிலை. ஆனால் நம் அன்பையெல்லாம் சுமந்துகொண்டு அவர்களை கவனித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர்கள்.


இவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம் என தேசமே நினைத்தது போலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கைதட்டச் சொன்னார் பாரத பிரதமர். கைதட்டல் ஒலி அடங்கியதா என்றே தெரியவில்லை அந்தக் காலக்கட்டத்தில் தான் சென்னையில் ஒரு மருத்துவரின் உடல் அங்கும் இங்கும் அலையவிடப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க விடாமல் சென்னை கீழ்ப்பாக்கம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் உடல் அண்ணா நகர் போனது. அங்கும் எதிர்ப்பு. ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்டது. போலீஸ் வந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டுக்குள் அமர்ந்து மருத்துவர்களுக்காக கைதட்டிய அதே நேரம் பல உயிர்களை காப்பாற்றிய ஒரு மருத்துவரின் உடல் அடக்கத்திற்காக அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்தை எப்படி பார்ப்பது? உண்மை புரியாமல் அன்று ஒரு உடலை எரிக்க பலர் தடை போட்டு நின்றனர். ஆனால் இன்றைய தேதிக்கு கொரோனா உடல் எரிக்கப்படாத மயானங்களே இல்லை என்ற நிலையே வந்துவிட்டது. இன்றும் நமக்காக ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள் மருத்துவர்கள்.




தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மருத்துவர்களும், செவிலியர்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சை, குழந்தை மகப்பேறு போன்ற மருத்துவத்துறைகளே அதிகம் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இந்த கொரோனா காலக்கட்டம் அவர்களை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. எந்த துறை தான் 100% பர்பெக்ட். எல்லா துறையிலும் அரைகுறை ஆட்களும், பணம் பிடுங்கும் நபர்களும், மனிதநேயம் மறந்த நபர்களும் இருக்கதானே செய்கிறார்கள்? அப்படித்தான் மருத்துவத்துறையிலும் சில புல்லுருவிகள் உள்ளன. அதற்காக அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சில சம்பவங்களுக்கு ஒட்டு மொத்த மருத்துவர்களையும் குறை சொல்வது, ஏதேதோ கோபத்தை மருத்துவர்கள் மீது காட்டுவது எல்லாம் முட்டாள்தனம் மட்டுமல்ல குற்றச்செயலும் கூட. சராசரி இந்தியர்களின் ஆயுளை விட மருத்துவத்துறையில் உள்ளவர்களின் ஆயுள் குறைவு என்கிறது ஆய்வு. நம் நலனுக்காகவே யோசிக்கும் மருத்துவர்களின் மனங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது யார்? வருடம் முழுவதும் அவர்களை அல்லல்படுத்திவிட்டு ஒருநாள் மட்டும் வாழ்த்துகள் பதிவிட்டு ஹார்ட் விட்டால் போதுமா? என்ன செய்ய வேண்டும் நாம்? 




மருத்துவர்களும், செவிலியர்களுமே மனிதர்கள்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் எப்போதும் முயற்சி செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தங்களுக்கென எதுவும் வேண்டாம். உங்களை நீங்கள் பத்திரமாக பார்த்தாலே போதுமென்பதே மருத்துவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு. என்ன ஆகிவிடும் என்ற கவனக்குறைவு, எல்லாம் சரியாகிவிட்டதே என்ற முன்னெச்சரிக்கையின்மை. இவையெல்லாம் நமக்கு மட்டுமல்ல மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமே கஷ்ட காலத்தைத் தான் கொண்டு வரும். இந்த பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களாகிய நாம் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருந்தாலே போதும்  சற்று உடலாலும் மனதாலும் ஓய்வெடுத்து உறங்குவார்கள் மருத்துவர்கள். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோம். மருத்துவர்களுக்கு மனதாலும் உடலாலும் சற்று ஓய்வு கொடுப்போம். இதை மருத்துவர்கள் தினத்தில் உறுதி ஏற்போம். 




ஒரு பின்குறிப்பு, ''ஹாலிவுட் படங்களில் வந்த சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவே டாக்டர்களை நடக்கவிட்டும், நின்றுகொண்டிருக்கும் டாக்டருக்கு இறகு பொருத்தியும் சோஷியல் மீடியாக்களில் வாழ்த்துகள் பறக்கின்றன'' என்று சொன்னதில் பொய் எதுவுமே இல்லை. காதில் போட்டுக்கொள்ள மருத்துவர்களுக்கு நேரம் இல்லாவிட்டாலும். அதுதான் உண்மை. அவர்கள் சூப்பர் ஹீரோக்கள்தான். அவர்கள் தேவ தூதர்கள்தான்.