பெண்களின்  பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்காக நிர்பயா நிதியின் கீழ் மும்பை காவல்துறை வாங்கிய சில வாகனங்கள், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இதை அடுத்து ஆளும்கட்சியினருக்கு பாதுகாப்பு வசதிகளுக்காக வாகனங்களை வழங்கியதை அடுத்து 


மும்பை காவல்துறை ஜூன் மாதம் நிர்பயா நிதியின் கீழ் பெற்ற ரூ.30 கோடி நிதியைப் பயன்படுத்தி 220 பொலேரோக்கள், 35 எர்டிகாக்கள், 313 பல்சர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 200 ஆக்டிவா இருசக்கர வாகனங்களை வாங்கியது. "ஜூன் மாதத்தில் வாகனங்கள் வாங்கப்பட்ட பிறகு, ஜூலை மாதம் அனைத்து 97 காவல் நிலையங்கள், சைபர், போக்குவரத்து மற்றும் கடலோர காவல் பிரிவுகளுக்கு அது விநியோகிக்கப்பட்டது," என்று இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறினார்.




மாநில காவல்துறையின் விஐபி பாதுகாப்புப் பிரிவின் உத்தரவைத் தொடர்ந்து, ஷிண்டே அணியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு எஸ்கார்ட் வாகனமாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மும்பை காவல்துறையின் மோட்டார் போக்குவரத்துத் துறையால் 47 பொலேரோக்கள் பல காவல்நிலையங்களில் இருந்து பெறப்பட்டன. 


இவற்றில் பயன்படுத்தப்பட்டவற்றில் 30 வாகனங்கள் இன்னும் திருப்பி அளிக்கப்படவில்லை என அதிகாரி மேலும் கூறினார்.


நிர்பயா நிதி என்றால் என்ன?


பெண்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2013 முதல் நிர்பயா நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. 2012 டிசம்பரில் தேசிய தலைநகரில் 23 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததை அடுத்து, 2013ல் நிர்பயா நிதியை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இது நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையால் (DEA) நிர்வகிக்கப்படும் நிதியாகும்.


2019 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து காவல் நிலையங்களிலும், மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகளிலும் பெண்கள் உதவி மையங்களை அமைக்க நிர்பயா நிதி உதவும் என்றார்.


2022 யூனியன் பட்ஜெட்டில், நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்காக, மானியக் கோரிக்கை பிரிவில், பெண்களின் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் கீழ், அமைச்சகம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.


தற்போது இந்த நிதியைதான் அரசு உபயோகித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், ““மஹாராஷ்டிராவின் நிர்பயாக்களுக்கான நிர்பயா நிதியின் நிலை இப்படி ஆகியிருப்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதை விட ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் பாதுகாப்பு முக்கியமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ கூறுகையில், “நிர்பயா நிதியில் வாங்கிய SUVகள் ஷிண்டே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பை வழங்குவதற்காக திருப்பி விடப்பட்டன. ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் இருவரும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது வெட்கக்கேடான செயல். ஏக்நாத் ஷிண்டே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.