டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் தொடர்ந்து 7-வது நாளாக ஹேக் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி அளிக்க வேண்டும் என ஹேக்கர்கள் பேரம் பேசியுள்ளனர். 


நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக இருப்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைதான். மத்திய மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல இருந்தாலும்,  நாட்டின் முதல் குடிமகன் முதல் சாமினியன் வரை அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என்றால் அது உண்மைதான். 


நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் அவர்களது நோயின் தன்மை குறித்த தகவல்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கர்களால் கடந்த வாரம் புதன் கிழமை முடக்கப்பட்டது. முதலில் சர்வர் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம் என நினைத்த டெக்னீசியன்ஸ், அதன் பின்னர் தான் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 


கடந்த 6 நாட்களாக ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை திரும்ப ஒப்படைக்க ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். கடந்த 6 நாட்களாக எவ்வளவோ முயற்சி செய்தும் சர்வர் மீட்கப்படததால் இன்றுடன் 7வது நாளாக சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 


எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி மக்களின் தரவுகள் அவற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், Computer Emergency Response Team எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்வத்தை தொடர்ந்து, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என பல குழுக்களாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் தொடர்பான வழக்கு நவம்பர் 25 அன்று டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள் (IFSO) பிரிவால் பதிவு செய்யப்பட்டது.


மீட்பு நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு நடுவில், எய்ம்ஸ் மருத்துவமையில் உள்ள 5000 கணினிகளில் 1200 கணினிகளுக்கு வைரஸ் அட்டாக் செய்யப்படாமல் இருக்க ஆண்டி-வைரஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும், இதற்கிடையில், என்ஐசி இ-மருத்துவமனை தரவுத்தளம் மற்றும் இ-மருத்துவமனைக்கான பயன்பாட்டு சேவையகங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன. NIC குழு, AIIMS இல் அமைந்துள்ள மற்ற இ-மருத்துவமனை சர்வர்களில் இருந்து வைரஸ்களை ஸ்கேன் செய்து சுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கையானது 24 மணிநேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்கப்படாத நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.