ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி திங்களன்று, ஞானவாபி விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலையற்ற விளைவை ஏற்படுத்தும் என்றும் பாபர் மசூதி பிரச்னையைப் போலவே இந்த விஷயமும் அதே பாதையில் செல்வதாகத் தெரிகிறது என கருத்து தெரிவித்துள்ளார்.


 






இந்தத் தீர்ப்பின் மூலம் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன் நோக்கமே தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, "பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ​​நம்பிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதால் நாட்டில் பிரச்னைகளை உருவாக்கும் என அனைவரையும் எச்சரித்தேன்.


இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்யும் என நம்புகிறேன். இந்த உத்தரவுக்குப் பிறகு, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 இன் நோக்கம் தோல்வியடையும் என்று நான் நம்புகிறேன்.


மசூதி வளாகத்திற்கு உள்ளே வழிபட அனுமதி கோரி ஐந்து இந்து பெண்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை எனக் கூறி ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் மஸ்ஜித் கமிட்டி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்ய உள்ளது. ஞானவாபி ஸ்ரீநகர் கவுரி வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் இன்று வழங்கி, அடுத்த விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


"நீதிமன்றம் முஸ்லீம் தரப்பின் மனுவை நிராகரித்தது. இந்து பெண்கள் வழக்கை தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என ஞானவாபி மசூதி வழக்கில் இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார்.


காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் இந்து கடவுளின் சிலைகள் அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்துக் கடவுள்களை தினசரி வழிபட அனுமதிக்கக் கோரி ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.