ஞானவாபி மசூதி வழக்கில் ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றம் உத்தரவு:


ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு  செய்ய விதிக்கப்பட்ட தடையை, ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய நாளில் நீதிமன்றம் மீண்டும் கூடும்போது, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்யலாம் என்ற வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கபப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.


வழக்கு விவரம்:


மசூதி வளாகத்திற்குள் ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 4 இந்து பெண் வழிபாட்டாளர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், தொல்லியல் துறை மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தலாம் என தீர்ப்பளித்தது. இதையடுத்து அவசர அவசரமாக அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி உச்சநீதிமன்றத்தை நாடியது. விசாரணையின் முடிவில், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ஜுலை 26ம் தேதி தடை விதித்த நீதிமன்றம், மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது. நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்விற்கான தடையை இன்று வரை நீட்டித்தது. இன்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பு வரும் வியாழனன்று அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதுவரையில் தொல்லியல் துறை மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தக் கூடாது எனவும், அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மசூதியில் சிவலிங்கமா?


உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது. இதையடுத்து, மசூதியின் வளாகத்தில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.