ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ரஜோரி செக்டார் கண்டி வனப் பகுதியில் ராணுவக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பரபரப்பு:


பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு பாடா துரியன் பகுதியில்  ராணுவ டிரக் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டிபிடித்து அழிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 


கண்டி வனப்பகுதியின் அடர்ந்த தாவரங்கள் மற்றும் பாறை நிலப்பரப்பில் உள்ள குகையில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.


இன்று காலை 7:30 மணியளவில் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதிக்கு ராணுவ குழு சென்றது. அப்போது, கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் தப்பிக்க வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதிகாரி உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்:


காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கையை வலுப்படுத்த கூடுதல் குழுக்கள் என்கவுண்டர் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன.


அந்த பகுதியில் பயங்கரவாதிகள் குழு இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது.


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில்,  பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ராணுவம் பின்னர் உறுதி செய்தது.


இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததற்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள்தான் காரணம். கையெறி குண்டுகளை வீசி அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம்.


தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்:


இந்தத் தாக்குதலில் துரதிருஷ்டவசமாக ராஷ்ட்ரிய ரைபில் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த ஒரு வீரர் ரஜோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் தீவிரவாத குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை வீரர்கள் என்ற அமைப்பு பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.