நாட்டில் பலே கொள்ளையர்களும், திருடர்களும் உள்ள அதே தருணத்தில் திருடவே தெரியாமல் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் சில காமெடி திருடர்களும் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது இந்த நகைச்சுவை சம்பவங்களின் வீடியோக்கள் உலா வருவதை நாம் பார்த்திருப்போம்.


திருட போன இடத்தில்:


அந்த வகையில் குஜராத்தில் நடந்த நகைச்சுவையான திருட்டு சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் அமைந்துள்ளது மொடாசா. இங்கு டிராக்டர் ஷோ ரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் விற்பனைக்காக சில டிராக்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.


வெளியே நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. காட்சிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதை நோட்டமிட்ட திருடன் ஒருவன் அதில் ஒரு டிராக்டரை திருட திட்டமிட்டுள்ளார். இதன்படி, இரவு நேரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த திருடன், டிராக்டரின் பின் சக்கரத்தின் அருகில் நின்று கொண்டு டிராக்டரை ஆன் செய்துள்ளான். ஆனால், எதிர்பாராத விதமாக டிராக்டர் முன்னோக்கி செல்லத் தொடங்கியது.






டிராக்டரில் சிக்கிய திருடன்:


இதனால், அந்த திருடனின் கால் மேல் அந்த சக்கரம் ஏறியது. சக்கரத்தில் சிக்கிய திருடன் கீழே விழ, டிராக்டரின் அந்த பின் சக்கரம் அந்த திருடன் மீது மேலே ஏறியது. ஆனாலும், திருடன் எழ முயற்சித்ததால் டிராக்டர் அவன் மீது ஏறி கீழே இறங்கியது. டிராக்டர் தன் மீது ஏறி இறங்கி முன்னோக்கி சென்றாலும், அந்த வலியிலும் அந்த திருடன் தன்னுடைய இடுப்பை தேய்த்துக் கொண்டே ஓடிச்சென்று டிராக்டர் மீது தாவி அமர்ந்து டிராக்டரை ஓட்டிச் சென்றான்.


மறுநாள் காலையில் அந்த ஷோரூமிற்கு வந்த உரிமையாளர் டிராக்டர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது தனது டிராக்டர் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர், போலீசிடம் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் 5 நாட்களுக்கு பிறகு திருடப்பட்ட டிராக்டரை கண்டுபிடித்தனர்.


திருடப்பட்ட மொடாசா நகரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. டிராக்டரை திருடிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.