நாட்டிலே காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபாடுள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்றாக இருப்பது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை:
அந்த வகையில், கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டும் தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்கவும், பட்டாசுகளை விற்பனை செய்யவும் அந்த மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தீபாவளி பண்டிகையின்போது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளார்.
தயாரிப்பு, இருப்பு வைத்தல், விற்பனை, இணையவழி விநியோகம் மற்றும் வெடிப்பது என அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. பண்டிகைகளை கொண்டாடுவது எந்தளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சூழலும் முக்கியம் ஆகும். இதன் காரணமாகவே, கடந்த 2 ஆண்டுகளாக இந்த முடிடு எடுக்கப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காற்று மாசுபாடு:
டெல்லியின் காற்று மாசுபாடு அளவு என்பது மக்களை மிகவும் கவலைப்படும் விதத்தில் ஆழ்த்தி வருகிறது. இதன் காரணமாக வாகனங்களுக்கு கட்டுப்பாடு, காற்று மாசுபடுத்தும் விஷயங்களை கட்டுப்படுத்துதல் , பட்டாசுகளுக்கு தடை என பல்வேறு நடவடிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடிப்பது இந்தியா முழுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பட்டாசு தயாரிப்பில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ள நிலையில், டெல்லியில் பட்டாசு தடை விதிக்கப்பட்டது கடந்தாண்டே தமிழக வியாபாரிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டும் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வியாபாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலமாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது.