குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா பகுதியில் கலவர சம்பவம் நடைபெற்றது. அப்போது ரயில்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவம் நடைபெற்றது. அந்த கலவரத்தின் போது பில்கின்ஸ் பனோ என்ற 21 வயது பெண் ஒருவரை 11 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வழக்கில் தொடர்பு உடைய 11 பேரையும் குஜராத் மாநில அரசு சிறையிலிருந்து விடுவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநிலத்தின் கூடுதல் உள்துறை செயலாளர் ராஜீவ் குமார் ஆங்கில தளம் ஒன்றுக்கு பேசியுள்ளார். அதில், “இந்த 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். சட்டத்தின்படி ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு அவர்களுடைய தண்டனையிலிருந்து விடுவிக்க மனு தாக்கல் செய்யலாம். 


 






அந்த வகையில் அவர்கள் தாக்கல் செய்த மனு மீது அரசு பரிசீலனை செய்து உரிய முடிவை எடுக்கும். அதன் அடிப்படையில் இந்த 11 பேரின் மனு மீது சிறைத்துறை குழு மற்றும் மாவட்ட குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு குற்றவாளிகளின் வயது, சிறையில் அவர்களின் நடத்தை மற்றும் குற்றத்தின்தன்மை ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது”எனத் தெரிவித்திருந்தார். 


வழக்கு கடந்து வந்த பாதை:


2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்ரா பகுதியில் கலவரம் நடைபெற்றது. அந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கின்ஸ் பனோவை 11 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 2004ஆம் ஆண்டு பில்கின்ஸ் பனோ தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார். அதன்பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இந்த வழக்கை குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


2008ஆம் ஆண்டு மும்பையிலிருந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கின்ஸ் பனோவுக்கு குஜராத் மாநிலம் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த நஷ்ட ஈடு உடன் அவருக்கு ஒரு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண