கடந்த அக்டோபர் மாதம், குஜராத்தின் கெடா மாவட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்பட எழு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.


மசூதிக்கு அருகே கர்பா நிகழ்ச்சியை நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதன் தொடரச்சியாகவே கல்வீச்சு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.


இதனை தொடர்ந்து, காவல் சீருடையின்றி சாதாரண ஆடையில் காவல்துறை அதிகாரிகள் கல் வீச்சு நடத்தியதாக சந்தேகிக்கும் நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


கல்வீச்சு நடத்தியதாக காவல்துறை சந்தேகிக்கும் நபர்களை மற்ற கிராமவாசிகள் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறை அதிகாரிகள் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது மனித உரிமை மீறல் என சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. 


இதனிடையே, குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. அதில், பொதுமக்கள் முன்பு காவல்துறை அதிகாரிகள் கம்பால் அடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உந்தேலா கிராமத்தில் வசிக்கும் 1,400 இஸ்லாமியர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 


இரண்டு மாதங்களுக்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் கம்பால் அடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்ததாக இஸ்லாமிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்கள் தேர்தலை புறக்கணித்ததாக வெளியான செய்திக்கு தேர்தல் அதிகாரிகள் மறுப்பு கூறியுள்ளனர்.


மாட்டர் தாலுகாவில் அமைந்துள்ள உந்தேலா கிராமத்தில் மொத்தமுள்ள 3,700 வாக்காளர்களில் 1,400 இஸ்லாமிய வாக்காளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் 93 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது அவர்கள் தங்கள் வாக்கை செலுத்தவில்லை என இஸ்லாமிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து உள்ளூர் இஸ்லாமிய தலைவர் மக்புல் சையத் கூறுகையில், "கம்பில் அடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை தண்டிக்க அரசு நிர்வாகம் மறுத்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கிராமத்தைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய வாக்காளர்களும் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர்.


காவல்துறையின் ஒருதலைப்பட்சமான செயலுக்கு எதிராக எங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தோம். இதுவரை எந்த ஒரு போலீஸ்காரரும் தவறு செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்படவில்லை" என்றார்.


இஸ்லாமிய தலைவர்களின் கருத்தை மறுத்துள்ள கேடா மாவட்ட ஆட்சியர் கே.எல். பச்சானி, "தேர்தல் அதிகாரியின் அறிக்கையின்படி, இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற பிரச்னைகள் நடந்ததாக யாரும் எங்களிடம் புகார் அளிக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த தரவின்படி, 43 சதவீத வாக்காளர்கள் உந்தேலாவில் வாக்களிக்க வந்துள்ளனர்" என்றார்.


பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


இதையடுத்து, டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.