மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி:


சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்ப  கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் டிரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு  நடைபெறுகிறது. அதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்ததோடு, தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, அங்கு உற்பத்தி செய்யப்படும் டிரோன்களின் வகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. பின்பு திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற  கருடா கிசான் எனும் டிரோன்களின் யாத்திரையையும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்பொழுது டிரோன் மூலமாக அவருக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.






உலகையே மாற்றும் தொழில்நுட்பம்:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாக்கூர், தொழில்நுட்ப வளர்ச்சி அதிவேகமாக உலகையே மாற்றி வருகிறது. அதன் பயன்பாடுகள் உலகின் மிக முக்கியமான சில சிக்கல்களைத் தீர்க்கிறது. கொரோனா காலகட்டத்தில் டிரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என அனைவரும் அறிவோம்.  டிரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்காப்பு, விவசாயம், தோட்டக்கலை, சினிமா போன்றவற்றுக்கு டிரோன் தொழில்நுட்பம் அவசியம் என, பல துறைகளில் அவை புதிய  மாற்றாக அமையும். 


டிரோன் மையமாக இந்தியா உருவெடுக்கும்:


வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹிமாச்சல பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் டிரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது.  இருப்பினும் டிரோன் மூலம் அதிவேகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும், இதற்கான திறமை இந்திய இளைஞர்கள் இடையே உள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி மூலம் இரண்டு ஆண்டுகளில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் குறைந்தது ஒரு லட்சம் டிரோன் பைலட்டுகள் தயாராவார்கள் எனவும்,  டிரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் எனவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்  நம்பிக்கை தெரிவித்தார்.