உறவினருக்கு சொந்தமான கம்பெனியில் வேலை செய்ய பிடிக்காத காரணத்தால் தன்னுடைய விரல்களை தானே வெட்டி இளைஞர் ஒருவர் நாடகமாடியுள்ளார். குஜராத்தில் காவல்துறை விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.


குஜராத் சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தர்பரா. இவருக்கு வயது 32. தனது சொந்தக்காரரின் நிறுவனத்தில் கணக்கு பிரிவில் கணினி ஆபரேட்டராக பணிபுரிகிறார். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, நண்பரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​மயக்கம் ஏற்பட்டு அம்ரோலியில் உள்ள வேதாந்தா சர்க்கிள் அருகே ரிங் ரோடு அருகே கீழே விழுந்ததாகவும் 10 நிமிடங்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பியபோது, இடது கையின் நான்கு விரல்கள் வெட்டப்பட்டிருந்ததாகவும் காவல்நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.


டிராமா போட்ட இளைஞர்:


சூனியம் வைப்பதற்காக இவரின் விரல்களை வெட்டி எடுத்துச் சென்றிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். அம்ரோலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நகர குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கில் பெரிய ட்விஸ்ட்டை குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மயூர் தர்பராவே தன்னுடைய விரல்களை வெட்டி கொள்வது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர்தான் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "சிங்கன்பூர் அருகே உள்ள ஒரு கடையில் கூர்மையான கத்தியை வாங்கியதாக தர்பரா வாக்குமூலம் அளித்துள்ளார்.


போலீஸ் விசாரணையில் திடுக் ட்விஸ்ட்:


நான்கு நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர் அம்ரோலி ரிங் ரோடுக்குச் சென்று தனது மோட்டார் சைக்கிளை அங்கே நிறுத்தினார். இரவு 10 மணியளவில், கத்தியால் நான்கு விரல்களை அறுத்து, ரத்த ஓட்டத்தை தடுக்க முழங்கையின் அருகே கயிற்றை கட்டினார். பின்னர், கத்தி மற்றும் விரல்களை ஒரு பையில் வைத்து தூக்கி எறிந்தார்.


அவரது, நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு பையில் இருந்து மூன்று விரல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றொரு பையில் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது.


வரச்சா மினி பஜாரில் உள்ள உறவினரின் நிறுவனமான அனப் ஜெம்ஸில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல்  தனது உறவினரிடம் அதை சொல்ல தைரியம் இல்லாததால் தர்பரா இந்த முடிவை எடுத்துள்ளார்" என தெரிவித்துள்ளனர்.