இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை ஆதரித்தனர்.


ஆனால், சிலர் அதைக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். அதற்கு பதிலாக விஷத்தை விதைக்கத் தொடங்கினர்" என்றார். எமர்ஜென்சி குறித்து பேசிய அவர், "அந்த காலம் காங்கிரஸுக்கு ஒரு களங்கமாக மாறியுள்ளது. அது ஒருபோதும் போகாது" என்றும் தெரிவித்தார். 



தொடர்ந்து பேசிய அவர், "பலமுறை, நாட்டின் ஒரு பகுதியில் மட்டுமே மின்சாரம் இருந்திருக்கிறது. ஆனால், அது மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனால், மற்றொரு பகுதியில் இருள் சூழ்ந்தது. முந்தைய அரசாங்கத்தின் போது, ​​தலைப்புச் செய்திகள் மூலம் உலகத்தின் முன் இந்தியா அவதூறு செய்யப்படுவதைப் பார்த்தோம்.


காங்கிரஸ் மீது பிரதமர் அட்டாக்:


அந்த நாட்களை நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான், ஒற்றுமை என்ற மந்திரத்துடன், அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்தி, ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பை நிறைவேற்றினோம். அதனால்தான், இன்று இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.


இந்தியாவின் ஜனநாயகம், குடியரசு ஆவதற்கு முன்பு வளமானதாக இருந்தது. இது, அனைவருக்கும் தூண்டுதலாக இருந்தது. இன்று இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. நாம் ஒரு பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாக இருக்கிறோம்.


 






காலம் மாறிவிட்டது. இது இருக்கிறது, அது இல்லை என்ற சூழலே டிஜிட்டல் துறையில் இல்லை. இதுவே, டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு காரணம். தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த முயன்றதை பெருமையுடன் கூறுகிறோம்" என்றார்.