கூரையை பிய்த்துகொண்டு பணம் கொட்டினால் எப்படி இருக்கும் என்பதெல்லாம் பேச்சுக்குத்தான் சரிபடும். எங்கேயாவது கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டுமா? ஆனால் டெக்னிக்கல் பிரச்னை காரணமாக பல கொடி பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வரும். இப்படியான சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒருவர் திடீரென உலக பணக்காரர் லிஸ்டிலேயே இடம் பிடிக்கும் அளவுக்கு பணக்காரர் ஆகியுள்ளார். எல்லாம் டெக்கினிக்கல் பிரச்னையால்தான். அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் டிமேட் அக்கவுண்டில் திடீரென ரூ.11ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது.
ரமேஷ் சாகர் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்து வருகிறார்.இவர் கடந்த வருடம் கொடாக்கில் டிமேட் அக்கவுண்ட் ஒன்றையும் ஓபன் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதல் இவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் கணக்கில் ரூ.11ஆயிரம் கோடி பணம் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதலீடுசெய்த பணமே 2 கோடிதான். அப்படி இருக்கையில் 11ஆயிரம் கோடி எப்படி என ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார் ரமேஷ்.
என்னடா இது என ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் மொத்த பணத்தையும் வங்கி திரும்பபெற்றுள்ளது. நடந்த டெக்கினிக்கல் பிரச்னை குறித்தும் வங்கியில் இருந்து ரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ரமேஷ் மட்டுமல்ல அன்று பலருக்கும் அப்படியான பயனற்ற ஜாக்பாட் அடித்துள்ளது. இது குறித்து கொடாக்கிடம் IANS செய்தி நிறுவனம் விளக்கம் கேட்டபோது, '' பயனர்களின் அக்கவுண்ட் மற்றும் பான் கார்டு விவரங்கள் தெரியாமல் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது’’ எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்காவிலும்..
இதேபோல் ஒரு சம்பவம் அமெரிக்காவிலும் நடந்தது. லூசியானாவை சேர்ந்த டேரன் என்ற தந்தைக்கு இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர்கள் பணம் வரவு வந்திருப்பதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, குழப்பமடைந்த அந்த நபர், மெசேஜ் சரியாக அனுப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உடனடியாக தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.
தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் வந்திருப்பதை உறுதி செய்தவுடன், டேரன் அச்சம் அடைந்துள்ளார். ஆட்களை தன் வீட்டிற்குள் புகுந்து சோதனையிடுவார்களோ என அவர் நினைத்துள்ளார். உடனே வங்கிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார்.
முன்னதாக, லூசியானா பொதுப் பாதுகாப்புத் துறையில் சட்ட அமலாக்க அலுவலராக பணிபுரிந்த அந்த நபர், தான் இந்த பணத்தை சம்பாதிக்கவில்லை என்றும் அந்த பணத்தை யாருக்கும் கொடுக்கவில்லை என்றும் வங்கியிடம் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனால், அவரது வங்கிக் கணக்கு மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டு, பின்னர் பணம் திரும்பப் பெறப்பட்டது.