பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.


இதனை குஜராத் மாநிலக் கல்வி அமைச்சர் ஜிது வகானி,  நிதி அமைச்சர் கனு தேசாய் ஆகியோர் இன்று (அக்.17) அறிவித்தனர்.


 






182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் பாஜக உள்ளது.


முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் 38 லட்சம் நபர்கள் பயனடைவர் என்றும், இந்த முடிவால் ஏழைக் குடும்பங்களுக்கு 650 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் வகானி  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


 






இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 1,700 கோடி ரூபாய் பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை வாயு (பி.என்.ஜி) ஆகியவற்றுக்கு 10 விழுக்காடு வாட் வரியைக் குறைக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


குஜராஜ் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியோடும் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


முன்னதாக, இந்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி சி வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாஜக இந்தாண்டு சட்டபேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 




பாஜகவுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி இம்முறை தேர்தலில் 36 முதல் 44 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி-சி வோட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 




வாக்குசதவிகிதத்தை பொறுத்தவரை குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022இல் பாஜக இம்முறை 46.8% வாக்குகள் பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 41.4% வாக்குகளிலிருந்து சுமார் 9.2 சதவிகிதம் குறைவாக பெற்று 32.3% வாக்குகள் பெறும் என்று கருத்துகணிப்பு கூறுகிறது. 


2017ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 இடங்களில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருந்தன.