குஜராத் மாநில அரசு காதல் திருமணம் செய்ய கண்டிப்பாக பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என்ற சட்டத்தை விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

திருமணமும்.. அதிகரிக்கும் பிரச்னையும்

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. காதல், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என இருவகைகளில் திருமணமானது நடைபெறுகிறது. அதேசமயம் சாதி, மதம், பொருளாதார பின்னணி போன்ற பல காரணங்களால் காதல் திருமணமானது பெரும்பாலான வீடுகளில் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் கடைசி வரை பெற்றோர்களின் சம்மதத்திற்காக போராடுகின்றனர். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். 

இந்திய அரசு சட்டமும் திருமணத்திற்கான வயதை ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக நிர்ணயித்துள்ளது. இப்படியான நிலையில் வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமண வழக்குகள், மோசடியாக நடைபெறும் நிகழ்வுகள், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் என பல விஷயங்களை மேற்கொள் காட்டி குஜராத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமணங்களில் பெரும்பாலானவை பிரச்னையையும் சந்திக்கின்றன. விவாகரத்து தொடங்கி பெற்றோர் ஆதரவு இல்லாமல் போவதால் உயிரை மாய்த்துக் கொள்வது வரை விபரீத முடிவுகளுக்கும் செல்வது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

விரைவில் அவசர சட்டம்

இந்த நிலையில் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்ற அவசர சட்டத்தை விரைவில் குஜராத் மாநில அரசு கொண்டு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும், இந்த சட்டத்தைக் கொண்டு வந்த முதல் மாநிலமாக குஜராத் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த அவசர சட்டத்துக்கு அந்த மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒரு மனதாக ஆதரவைத் தெரிவித்துள்ளது முரண்பாடாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறியுள்ளது. 

தங்களுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொள்ளும்போது பெற்றோர்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார். அதனை தவிர்க்க ஒரு சட்ட கட்டமைப்பு தேவை என பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளால் அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பங்களின் சமூக நிலையும் பாதிக்கப்படுகிறது. 

ஒருவேளை வீட்டை விட்டு வெளியேற திருமணம் செய்ய நினைத்து காவல்துறையை அணுகும்பட்சத்தில் மணப்பெண்ணின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட முகவரிக்கு முறையான அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். பின் பெற்றோர் பதிலளிக்க அல்லது ஆட்சேபனைகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.