குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் உயிர்பலி அதிகரிக்ககூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 


பயங்கரமாக அடித்துச்செல்லப்பட்ட வெள்ளத்தில் சாலைகள் முழுவதும் அடியோடு பேந்து காட்சியளிக்கிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 


குஜராத்தின் வதோதராவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் சாலை, கனமழையால் பாதிக்கப்பட்டு துண்டு துண்டாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் ஒருபுறம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


இடைவிடாத மழை மற்றும் அருகிலுள்ள அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சாலையின் சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், சேதமடைந்த பகுதி இடிக்கப்பட்டு புனரமைப்புக்கு தயார்படுத்தப்படுவதால், சீரமைக்க பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. 






இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து ஒருபுறம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட், ஆனந்த், மஹிசாகர், கெடா, அகமதாபாத், மோர்பி, ஜுனாகத் மற்றும் பருச் மாவட்டங்களில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 17,800 பேர் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. கச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திரநகர், ஜூனாகத், ராஜ்கோட், பொடாட், கிர்சோம்நாத், அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், இயற்கைப் பேரிடரைக் கையாள்வதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.