தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தயாரித்துள்ள இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகி நாட்டு மக்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புள்ளி விவரங்கள் மிகவும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.



மாணவர்கள் தற்கொலை விகிதம் அதிகரிப்பு: 


அதாவது, கடந்த இரண்டு தசாப்தங்களாக ( அதாவது 20 வருடங்களாக) மாணவர்களின் தற்கொலை விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 53 சதவீதம் பேர்  ஆண்கள்.


2021-2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி மாணவர்கள் தற்கொலை 6 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில் மாணவிகளின் தற்கொலை  விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாக சமூகத்திற்கு அமைந்துள்ளது.


மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகம்:


மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதமானது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தை காட்டிலும் அதிகளவாக உள்ளது. 0-24 வயதுடையவர்களின் மக்கள் தொகை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 654ல் இருந்து 13 ஆயிரத்து 044 ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகளவு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. தென்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 29 சதவீத மாணவர்கள் தற்கொலைகள் அரங்கேறியதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வேதனை:


தேசிய ஆவண குற்றக் காப்பகம் காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரத்தை தயார் செய்துள்ளனர். நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவு திட்டங்களை ஆண்டுதோறும் செயல்படுத்தி வந்தாலும், மாணவர்கள் கடுமையான மன அழுத்தம், சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.


மாணவர்களுக்கு படிக்கும்போதே மன தைரியத்தை அதிகரிக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுவதும், எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.