குஜராத்தில் உள்ள 182 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, பாஜக 133 இடங்களிலும் காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாப்பில் வெற்றி பெற்று அரியணையைக் கைப்பற்றிய உற்சாகத்தில் குஜராத்திலும் தனித்து களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
குஜராத் தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது பாஜக- காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் இரவு, பகல் பாராமல் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே குஜராத்தில் காங்கிரஸின் ஓட்டு வங்கியை ஆம் ஆத்மி கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மிகக்குறைந்த இடங்களிலேயே முன்னிலை வகித்து வருகிறது.
நேற்று டெல்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடத்தப்பட்ட ABP-CVoter கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அடிப்படையில் பாஜக 49.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டது. இது 2017 குஜராத் தேர்தலில் பெற்றதை விட 0.4 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP-CVoter கருத்துக்கணிப்பு:
மொத்த தொகுதிகள்: 182
கட்சிகள் | முன்னிலை/ வெற்றி |
பாஜக | 128 முதல் 140 |
காங்கிரஸ் | 31 முதல் 43 |
ஆம் ஆத்மி | 3 முதல் 11 |
மற்றவை | 2 முதல் 6 |
முன்னதாக கடந்த 1aஅம் தேதி நடந்த 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 63.31% வாக்குகளும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 67% வாக்குகளும் பதிவாகின.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 128-140 இடங்களுக்கு இடையில் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் மற்றும் 49.4 சதவீத வாக்குகளைப் பெறலாம்.
2017 தேர்தலில் குஜராத்தில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2002இல் 127 இடங்களை கைப்பற்றியதே இதுவரை பாஜகவின் சிறந்த வெற்றியாக இருந்தது. கோத்ரா கலவரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்தல்களில் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதுவரை, 1985 சட்டப்பேரவைத் தேர்தலில் 149 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றதே அம்மாநிலத்தில் ஒரு கட்சி அதிகபட்ச இடங்களில் பெற்ற வெற்றியாக உள்ளது. அதன்பிறகு எந்தக் கட்சியும் 130 இடங்களை தாண்டவில்லை.