கடந்த 2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் குஜராத் காங்கிரஸின் செயல் தலைவரும் எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் 18 பேருக்கு அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.






ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய சாலை மறியல் போராட்டம் தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேவானி மற்றும் பிறருக்கு அபராதம் விதித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பி.என்.கோஸ்வாமி, இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்காக அக்டோபர் 17 வரை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார்.


குஜராத் பல்கலைக்கழக சட்டத் துறையின் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்திற்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பெயர் சூட்டக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஜிக்னேஷ் மேவானி மற்றும் 19 பேர் மீது 2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143 (சட்டவிரோத கூட்டம்) மற்றும் 147 (கலவரம்) மற்றும் குஜராத் போலீஸ் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்துவிட்டார்.


முக்கிய தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, 2017 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாக வெற்றி பெற்றார். பின்னர் கட்சி அவரை அதன் குஜராத் பிரிவின் செயல் தலைவராக்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்தர தின கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்த போது, குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உனா வரை 20,000 தலித் மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. உனா நகரில் மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.


"இனி செத்த மாட்டினை அப்புறப்படுத்தும் பணியைச் செய்ய மாட்டோம்’’ என அந்த பேரணியில் மக்கள் உறுதிமொழி எடுத்தனர். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் ஒட்டுமொத்த எழுச்சியின் அடையாளமாக, அந்தப் பேரணியைக் கருதினர். அந்த மக்களை ஒருங்கிணைத்தவர் ஜிக்னேஷ் மேவானி என்பது குறிப்பிடத்தக்கது.