பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய அயோத்தி ராமர் கோயில்:
கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமர் கோயிலில் வைக்கப்படுவதற்காக 450 கிலோ எடையில் டிரம் (Drum) தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட டிரம்மானது, தேர் மூலம் அயோத்தி ராமர் கோயில் வரை எடுத்து செல்லப்பட உள்ளது. அகமதாபாத்தில் கிளம்பிய தேரை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இன்று தொடங்கி வைத்தார்.
கோயிலில் வைப்பதற்காக தயாரான டிரம்:
இந்த டிரம்மை அகில இந்திய டப்கர் சமாஜ் தயாரித்துள்ளது. இதுகுறித்து சமாஜின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "இரும்பு தகடுகளால் டிரம் செய்யப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் வரை, இந்த டிரம்மை பயன்படுத்தலாம்" என்றார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அதுமட்டும் இன்றி, நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது.
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டு கொண்டார்.
இதையும் படிக்க: New Zealand MP: "உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட இளம் பழங்குடி எம்பி!