குஜராத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த கவுரவ் காந்தி எனும் பிரபல மருத்துவர், உறங்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


யார் இந்த கவுரவ் காந்தி:


ஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கவுரவ் காந்தி. ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். 41 வயதான நிலையில் கவுரவ் காந்தி தனது பணிக்காலத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து உள்ளார் என தகவல்கள் தெரிவிகின்றன. இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணச் செய்தி அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணம் மருத்துவ உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக, அவரது சிகிச்சையால் பலனடைந்த பலரும் தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


எப்படி நிகழ்ந்தது மரணம்?


திங்கட்கிழமை அன்று வழக்கம்போல் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு, அரண்மனை சாலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உணவருந்தி விட்டு தூங்கியுள்ளார். அசவுகரியங்கள் எதையும் உணராமல் இயல்பாகவே அவர் இருந்துள்ளார். வழக்கமாக தினதோறும் காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்துகொள்வதை பழக்கமாக வைத்திருந்துள்ளார். செவ்வாயன்று காலை அவர் எழ தாமதகாமவே குடும்பத்தினர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு பதில் ஏதும் இல்லாததால் குடும்பத்தினர் அறைக்கே சென்று கவுரவை தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுரவ் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


விழிப்புணர்வு பரப்புரை:


இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இளம் வயதிலேயே கைதேர்ந்தவராக விளங்கிய கவுரவ் காந்தி, அதுதொடர்பாக தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, இதய ஆரோக்கியம் மற்றும் தடுப்பு உத்திகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், பேஸ்புக்கில் 'ஹால்ட் ஹார்ட் அட்டாக்' என்ற பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த சூழலில் அவரே மாரடைப்பால் உயிரிழந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் சோகம்:


சமீப காலங்களாக வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் வகுப்பறையிலேயே உயிரிழப்பது, விளையாட்டு வீரர்கள் மைதானங்களிலேயும், உடற்பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் பயிற்சி கூடங்களிலேயும் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பதை காண முடிகிறது. எனவே பொதுமக்கள் இதயத்தை முறையாக பராமரித்து, உடல்நலத்துடன் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.