உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.


ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.


ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது.


மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டு இருந்தார். தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலீஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல என்றும் அவர் பேசியிருந்தார்.


கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதிப்பதாக நினைத்தால் நீதிபதிகள் நியமனம் குறித்து அறிவிப்பை நீதித்துறையே வெளியிடட்டும் என கிரண் ரிஜிஜு சவால் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில், தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டம் ரத்து செய்யப்பட்டதையும் கொலீஜியம் பரிந்துரைகளை ஏற்க மத்திய அரசு தாமதம் செய்து வருவதையும் உச்ச நீதிமன்றம் தொடர்புபடுத்தி பேசியுள்ளது. கொலீஜியம் பரிந்துரைகளை தாமதம் செய்து நீதித்துறைக்கே சவால் விடுப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் நியமனம் குறித்து பேசிய நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ். ஓகா ஆகியோர் கொண்ட அமர்வு, "தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமையவில்லை என்பதில் அரசாங்கத்தில் ஒரு அதிருப்தி இருப்பதாகத் தோன்றுகிறது. நாட்டின் சட்டத்திற்கு இணங்காததற்கு அது காரணமாக இருக்க முடியாது" என்றார்.


ரிஜிஜு பேசிய கருத்து குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விகாஸ் சிங் நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தினார். அதற்கு பதில் அளித்து பேசிய நீதிபதி கவுல், "அப்போது, அவர்கள் நமக்கு அதிகாரத்தைக் கொடுக்கட்டும். 


நமக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அவர்கள் செய்யட்டும் என்று யாரேனும் ஒருவர் கூறினால், நாமே அதைச் செய்வோம். இது (ரிஜிஜுவின் கருத்து) உயர்வான பதவியில் இருக்கும் ஒருவரிடமிருந்து வந்துள்ளது. அப்படி பேசியிருக்க கூடாது" என்றார்.