பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றப்படும் என்று நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளித்ததையடுத்து, அதற்கான ஒப்புதலை ஜிஎஸ்டி கவுன்சில் இன்று வழங்கியுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி:
இதன்படி, இனி நாட்டில் 12 மற்றும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி நீக்கப்படுகிறது. இனி 5 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே அமலில் இருக்கும். புதியதாக 40 சதவீத வரி இருக்கும். இன்று நடைபெற்று முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் செப்டம்பர் 3, 2025 ( இன்று) டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு புதிய ஜிஎஸ்டி வரி என்று பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை கீழே காணலாம்.
12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட பொருட்கள்:
1. டிராக்டர்
2. டிராக்டர் டயர்ஸ் - டிராக்டர் உதிரி பாகங்கள்
3. சொட்டு நீர் பாசன கருவி மற்றும் தெளிப்பான்கள்
4. விவசாய, தோட்டக்கலை, அறுவடை கருவிகள்,
5. குறிப்பிட்ட உயி்ர் பூச்சிக்கொல்லி மருந்து
28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்திற்கு மாற்றப்பட்ட பொருட்கள்:
1. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் - 1200 சிசிக்குள் இருக்க வேண்டும், 4 ஆயிரம் மி.மீட்டருக்குள் வடிவம் இருக்க வேண்டும்
2. டீசல் மற்றும் டீசல் ஹைப்ரிட் கார்கள் - 1500 சிசிக்குள் இருக்க வேண்டும், 4 ஆயிரம் மி.மீட்டருக்குள் வடிவம் இருக்க வேண்டும்
உயிர்காக்கும் மருந்து
பராத்தாவிற்கு இனி 0 ஜிஎஸ்டி வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கும் இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது. பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது.
கார் மட்டுமின்றி ஏசி மற்றும் டிவி மீதான ஜிஎஸ்டி-யும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை தடாலடியாக மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள இந்த புதிய வரியில் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி வரும் 22ம் தேதி முதல் அமலாக உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் விவசாய, வீட்டு உபயோக மற்றும் கார் பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைய உள்ளது.