GSLV-F14 Countdown: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம், நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.


GSLV-F14 கவுண்டவுன்:


வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்குகிறது. பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 


ராக்கெட் வடிவமைப்பு:


420 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-14 விண்கலம் 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் இடம்பெற்றுள்ளது. 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். 


இன்சாட்-3டிஎஸ் என்றால் என்ன?


INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய சுற்றுப்பாதையில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவைகளைத் தொடர அனுமதிக்கிறது.  INSAT-3DS ஒரு புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி,  INSAT-3DS ஆனது INSAT அமைப்பின் திறன்களை மேம்படுத்தவும் உதவும். இந்த செயற்கைக்கோளின் மொத்த நிறையானது 2,275 கிலோகிராம் ஆகும். இதற்கு செயல் வடிவம் வழங்குவதில் இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.


இன்சாட்-3டிஎஸ்-ல் உள்ள கருவிகள் என்ன?


INSAT-3DS ஆனது மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் பல அதிநவீன பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் ஆறு சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் இரண்டு தகவல் தொடர்பு பேலோடுகள் அடங்கும். டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டிஆர்டி) கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஎஸ்&ஆர்) டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு பேலோடுகள் ஆகும். 


தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டரின் நோக்கமாகும். செயற்கைக்கோளின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள SAS&R டிரான்ஸ்பாண்டர், பீக்கான் டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னல் அல்லது எச்சரிக்கை கண்டறிதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை எளிதாக்கும்.