கரூர் அருகே மணல்மேடு ஆட்டுச் சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. ரம்ஜான் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.




கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில்  நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். 




ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் 75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.




கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால், இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. கோடைகாலத்தில் ஆடுகளுக்கு கழிச்சல் நோய் ஏற்படுவதால் ஆடுகள் வரத்து குறைந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


நுங்கு ,தர்பூசணி, இளநீர் விற்பனை ஜோர்


அக்னி நட்சத்திரம் நெருங்குவதை ஒட்டி, கரூர் ,சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு, தர்பூசணி,இளநீர் விற்பனை கனஜோராக நடக்கிறது.கரூர் மாவட்டத்தில் கடந்த,15 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி முதல் ,104 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால்,பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் இளநீர், தர்பூசணி ,மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.மேலும், கோடைகாலத்தில் களிமண் பானையில் வைக்கப்பட்ட நீரை பொதுமக்கள் விரும்பி அருந்துவது வழக்கம். வரும் மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து களிமண் பானைகள் கொண்டுவரப்பட்டு கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் ஜவகர் பஜார் கோவை சாலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண பானை 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும்,பிளாஸ்டிக் பை பொருத்தப்பட்ட மண்பானை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கரூர் மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் இல்லை.இதனால், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகள் இருந்து கரூருக்கு இளநீர் கொண்டு வரப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கரூரில் இளநீர் விற்பனை ஜோராக நடக்கிறது.ஒரு இளநீர் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


குறுவட்ட அளவில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்


குளித்தலையை அடுத்த,வைகைநல்லூர் பஞ்ச் அலுவலகத்தில், குறுவட்ட அளவில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் கலியபெருமாள் தலைமை வகித்தார். ஸ்ரீவித்யா ,தலைமை இட தாசில்தார் மதியழகன், முத்துக்குமார், பார்த்திபன், ரவி உள்ளிட்ட முன்னிலை வகித்தனர். இதில், வேளாண்மை ,கூட்டுறவு, பட்டு வளர்ச்சி ,உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட 13 துறைகள் தொடர்பான அரசு திட்டங்களுக்கு ஒரே இடத்தில் விவசாயிகள் பதிவு செய்தனர். மேலும், நில உரிமையாளர் பெயரில் உள்ள சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுக்கு, வருவாய் துறையில் வலைத்தளத்தில் பதிவு செய்யும் பணியும் நடந்தது.இதே போல், தோகமலை வருவாய் குறுவட்டத்திற்கு,கழுகு அலுவலகத்திலும், நங்கவரம் வருவாய் குறுவட்டத்திற்கு ஆர்டிமலை அலுவலகத்திலும்,சிறப்பு முகாம் நடந்தது. ஆரைக்குள் மாதேஸ்வரி சக்திவேல் முன்னிலையில் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்குரிய ஆவணங்களை பதிவு செய்தனர்.