GRAP Stage 4 In Delhi-NCR: டெல்லியில் க்ராப் 4 நிலை கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், எதற்கெல்லாம் தடை என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


டெல்லியில் மோசமான காற்றின் தரம்:


தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், மாசு உமிழ்வைத் தடுக்கவும், மாசுபாட்டை எதிர்த்துப் போராடவும், தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) நிலை 4 நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு டெல்லியில் காற்றின் தரம்,  457 என்ற ஆபத்தான காற்றுத் தரக் குறியீட்டை (AQI) பதிவுசெய்ததது. இது காற்றின் தரத்தை "மிக கடுமையான பிளஸ்" பிரிவில் வைத்தது.


டெல்லியில் எதற்கெல்லாம் அனுமதி?


GRAP நிலை 4 இன் கீழ், டெல்லி-NCR இல் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 


அத்தியாவசிய வாகனங்கள்: அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகள் தொடர்ந்து இயங்கலாம். எல்என்ஜி, சிஎன்ஜி, மின்சாரம் அல்லது பிஎஸ்-6 டீசல் போன்ற தூய்மையான எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
பொது போக்குவரத்து மற்றும் அவசர சேவைகள்: பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக பேருந்துகள், மெட்ரோ மற்றும் அவசர சேவை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
ஆன்லைன் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் செயல்பாடுகள்: தனியார் மற்றும் முனிசிபல் ஆகிய இரண்டும் அலுவலகங்கள் 50% திறனில் செயல்படலாம். மீதமுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதோடு வணிகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யலாம்.
கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள் ஆன்லைன் கற்றலுக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பிற நிறுவனங்கள் அரசாங்க உத்தரவுகளின்படி நேரடி வகுப்புகளுடன் தொடர்ந்து செயல்படலாம்.


டெல்லியில் எதற்கெல்லாம் தடை?


காற்றுத் தர மேலாண்மை குழு (CAQM) மாசு அளவைக் குறைக்கும் நோக்கில் தொடர்ச்சியான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 


கனரக வாகனத் தடை: டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட டீசலால் இயக்கப்படும் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் (BS-IV அல்லது அதற்குக் குறைவானது) அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற பயன்பாடுகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, LNG, CNG, அல்லது BS-VI டீசலில் இயங்காத வரை, அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் டெல்லிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இலகுரக வர்த்தக வாகனக் கட்டுப்பாடுகள்: மின்சாரம், CNG அல்லது BS-VI டீசலில் இயங்கும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அல்லது சேவைகளை எடுத்துச் செல்வதைத் தவிர, டெல்லிக்கு வெளியில் இருந்து வரும் அத்தியாவசியமற்ற இலகுரக வணிக வாகனங்கள் (LCVகள்) தடை செய்யப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகள்: நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம் மற்றும் குழாய்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புக்கான நடவடிக்கைகள் கடுமையான தடையை எதிர்கொள்கின்றன. GRAP இன் 3 ஆம் கட்டத்திலிருந்து நடவடிக்கைகள் நீட்டிக்கப்படுகின்றன.
கட்டுப்படுத்தப்பட்ட நேரடி வகுப்புகள்: பள்ளிகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாற்றப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்தார். GRAP IV கட்டுப்பாடுகளுக்கு முன், ஹரியானா அரசு சனிக்கிழமையன்று 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டது. 
வீட்டிலிருந்து வேலை: NCR இல் உள்ள அலுவலகங்கள் 50% திறனில் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். பொது, முனிசிபல் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பலத்துடன் செயல்படலாம், அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை முடிவு செய்யலாம்.
பிற கட்டுப்பாடுகள்: கல்லூரிகளை மூடுவது, அத்தியாவசியமற்ற வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்துவது மற்றும் ஒற்றைப்படை-இரட்டைத் திட்டங்கள் போன்ற வாகனக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம்.



பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


டெல்லியில் உள்ள 34 கண்காணிப்பு நிலையங்களில் 32 கண்காணிப்பு நிலையங்களில் 400க்கு மேல் "கடுமையான" காற்றின் தரக்குறியீடு அளவுகள் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்கள் தெரிவிக்கின்றன. AQI 401 முதல் 450 வரை "கடுமையானது" என வகைப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் 450 க்கு மேல் உள்ள அளவீடுகள் "மிக கடுமையானவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான பிளஸ்” வகை, இது ஆரோக்கியமான நபர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களையும், ஏற்கனவே உடல் நல குறைபாடு உள்ளவர்களுக்கு கடுமையான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே, குடியிருப்பாளர்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.