டெல்லியின் காற்றில் மாசுத் தன்மை அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சார்பில் டெல்லியில் வாழும் மக்களுக்குப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. காற்று மாசுவைக் கண்காணிக்கும் மத்திய குழு, டெல்லி அரசு அதிகாரிகளையும், தனியார் நிறுவனங்களையும் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளனர்.
காற்று மாசு கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Graded Response Action Plan (GRAP) கமிட்டி, வரும் நவம்பர் 18 முதல் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் பருவ நிலை ஒத்துழைக்காது எனவும், அவசர காலத்தைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
விவசாயிகளால் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் டெல்லி காற்று மாசுவை ஏற்படுத்தியதில் 35 சதவிகிதம் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் PM2.5 என்று அழைக்கப்படும் நுரையீரலைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களின் அளவு கடந்த 24 மணி நேரத்தில் அதன் எல்லையான 300 என்பதைக் கடந்து, ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 381 மைக்ரோ கிராம்கள் என்ற அளவில் கடந்த நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு அளவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
பாதுகாப்பான அளவான ஒரு க்யூபிக் மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம்கள் என்ற அளவை விட சுமார் 6 மடங்கு அதிகம் இது என அறியப்பட்டுள்ளது. அதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு இதே நிலை நீடித்தால், டெல்லி நகரம் அவசர நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
டெல்லி காற்று மாசு குறித்து வெளியிடப்பட்ட பரிந்துரைகள்:
1. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வாகனப் பயன்பாட்டைக் குறைந்தபட்சம் சுமார் 30 சதவிகிதம் என்ற அளவில் குறைக்க வேண்டும்; வெளியில் வேலைகளை மக்கள் தவிர்த்து, வீட்டிலேயே இருக்க வேண்டும்.
2. அரசு அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. டெல்லி நகரத்திற்குள் லாரிகள் நுழைவைத் தடுப்பது, கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவது, கார்களைப் பயன்படுத்துவதில் விதிமுறைகள் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த நவம்பர் 12 அன்று, டெல்லி தலைநகர்ப் பகுதியில் சுமார் 200 மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவற்றைப் பார்வையிடுவதற்கு முடியாதவாறு, புகை மண்டலம் சூழ்ந்து கண்கள் எரியும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், சப்தர்ஜங் விமான நிலையம் ஆகியவற்றிலும் பார்வையிடும் அளவு 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தெரியாதவாறு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.