Govt Hikes Paddy MSP: நெல், பருத்தி உள்ளிட்ட 14 விவசாய பயிர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் நிதிச் செலவில், குறைந்தபட்ச ஆதார விலை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்வு:
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் அடுத்தடுத்து 4 மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு 5.35 சதவிகிதம் உயர்த்தி, ரூ.2,300 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 'பொது' ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆகவும், 'ஏ' கிரேடு ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,320 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கான அரசாங்கத்தின் ஆதரவின் முக்கிய நடவடிக்கையாக இந்த முடிவு பார்க்கபடுகிறது. தேர்தல்களுக்கு முன்னதாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு:
குறைந்தபட்ச ஆதார விலை உயர்வின் மொத்த நிதி தாக்கம் ரூ.2,00,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய பருவத்தை விட சுமார் ரூ.35,000 கோடி அதிகமாகும். இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், “கணிசமான உபரி அரிசியை நிர்வகித்த போதிலும், நெல் ஆதரவு விலையில் குவிண்டால் ஒன்றுக்கு 117 ரூபாய் உயர்த்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு ஆதரவு விலையை பராமரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் "தெளிவான கொள்கையின்" நிரூபணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
14 பயிர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு:
தானிய வகைகளில், 'ஹைபிரிட்' ரக ஜவ்வரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 191 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,371 ரூபாயாகவும், மல்தானி ரகம் குவிண்டாலுக்கு 196 ரூபாய் அதிகரித்து 3,421 ரூபாயாகவும் உள்ளது. 2024-25 சீசனில் கம்பிற்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.125 அதிகரித்து ரூ.2,625 ஆகவும், ராகிக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.444 உயர்த்தப்பட்டு ரூ.4,290 ஆகவும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.135 உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,225 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை சார்ந்திருப்பதை குறைக்க, துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.550 உயர்த்தப்பட்டு ரூ.7,550 ஆகவும், உளுத்தம் பருப்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு ரூ.7,400 ஆகவும், மூங்கில் கொள்முதல் விலை ரூ.124 உயர்த்தப்பட்டு ரூ.8,682 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.520 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.7,280 ஆகவும், நிலக்கடலைக்கான கொள்முதல் விலை ரூ.406 உயர்த்தப்பட்டு ரூ.6,783 ஆகவும், சோயாபீன் (மஞ்சள்) குவிண்டாலுக்கு ரூ.292 உயர்த்தப்பட்டு ரூ.4,892 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எள்ளுக்கான MSP குவிண்டாலுக்கு ரூ.632 உயர்த்தப்பட்டு ரூ.9,267 ஆகவும், நைஜர் விதைகள் குவிண்டாலுக்கு ரூ.983 உயர்த்தப்பட்டு ரூ.8,717 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான MSP, 'நடுத்தர ஸ்டேபிள்' ரகத்திற்கு, குவிண்டால் ஒன்றுக்கு, 501 ரூபாய் உயர்த்தப்பட்டு 7,121 ரூபாயாகவும், 'லாங் ஸ்டேபிள்' ரகத்திற்கு 7,521 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.