நேற்றைய தினம் ( ஜூன் 18 ) நடைபெற்ற UGC NET 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு இன்று ( ஜூன் 19 ) அறிவித்துள்ளது. தேர்வில், நேர்மைத்தன்மை சமரசம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து UGC-NET தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
UGC NET 2024 தேர்வு:
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான நெட் தேர்வு ஜூன் 18ஆம் தேதி, நேற்று நடைபெற்றது.
தேர்வு ரத்து:
இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற தேர்வில், நேர்மைத்தன்மை சமரசம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து UGC-NET ஐ ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு எதுவும், தற்போது வரை வெளியாகவில்லை.