விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.  ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 




அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். 


இதனிடையே விபத்துக்கான காரணமாக வானிலையும் தொழில்நுட்ப கோளாறும் சொல்லப்படுகிறது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்காது என விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கறுப்புப்பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறிவந்த நிலையில், தற்போது கறுப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. அதை பெங்களூர் அல்லது டெல்லிக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், நீலகிரி லெவிங்டனில் 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு 13 பேரின் உடல்களுக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் தனது இரங்கலை பதிவு செய்தார். 


 






அவரைத்தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிகிச்சைப்பெற்று வரும் விமானி வருணையும் சந்தித்தார். 


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை “விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது நெஞ்சை அடைக்கிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்துள்ளேன். ஒரு மருத்துவராக, சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை பார்வையிட்டேன். அவரது உள்ளுறுப்புகள் சீராக செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் இந்த நேரத்தில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். வருண் சிங் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.