பழைய வாகனங்களை பயன்படுத்த தடை விதிப்பது என்பது புதிதல்ல. விபத்துகளை குறைக்கவும் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.


15 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசுக்கு சொந்தமான அனைத்து விதமான வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். 


மத்திய அரசு அதற்கான கொள்கை முடிவை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. பேருந்துகள், டிரக்குகள் மற்றும் கார்கள் உள்பட அனைத்து  வாகனங்களும் இதில் அடங்கும். பழமையான அனைத்து வாகங்களும் தெருக்களில் வெளியேற்றப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அக்ரோவிஷன் 2022 பதிப்பின் தொடக்க விழாவில் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி 15 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய அரசின் அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்படும் கோப்பில் நேற்று கையெழுத்திட்டேன்.


இந்திய அரசின் இந்த கொள்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளேன். மாநில அளவில் இந்தக் கொள்கையை அவர்கள் ஏற்க வேண்டும்" என்றார்.


வாகன மாசுபாட்டினால் ஏற்படும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகன ரத்து கொள்கை கொள்கையை அறிவித்தது. 


இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர், "நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2-3 வாகன ஸ்கிராப்பிங் (பழைய வாகனங்களின் பாகங்களை அப்புறப்படுத்தும் நிலையம்) வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பழைய டயர்கள் போன்ற பழுதடைந்த வாகனங்களின் பாகங்கள் சாலைகள் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும்" என்றார்.


அக்டோபர், 2018 இல், அரசாங்கம் வாகன அப்புறப்படுத்தும் கொள்கையை அறிவிப்பதற்கு முன், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.


2014 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. ஆகஸ்ட் 2021 இல், பிரதமர் நரேந்திர மோடி தன்னார்வ அரசு வாகன நவீனமயமாக்கல் திட்டம் எனப்படும் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையைத் தொடங்கினார்.


இந்தக் கொள்கையை அறிவிக்கும் போது, ​​கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி முதலீட்டைக் இத்திட்டம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதாக மோடி தெரிவித்திருந்தார்.