புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட காலாப்பட்டில் நடந்த ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி மற்றும் புதுச்சேரி அரசின் முக்கிய அதிகாரிகள், ஏற்றுமதியாளர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனை பகுதிகளில் தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டைகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகள் பெரும்பாலான மூடிக்கிடக்கின்றன. பல தொழிற்சாலைகள் பக்கத்து மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதற்கு காரணம் தொழில்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளே காரணம் என்பது தெரியவந்துள்ளது. தொழில் என்றால் என்னவென்று தெரியாத அதிகாரிகளை இங்கு பணியமர்த்துவதால் அவர்கள் தொழில் தொடங்குவது, நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் தெரியாமல் தொழில் முதலீட்டாளர்களிடம் எடுத்தெரிந்து பேசுவது, தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கு தங்களுக்கு சில சலுகைகளை எதிர்பார்த்து தாமதப்படுத்துவதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.



புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தற்போது 3 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடக்கிறது. அதை .4 ஆயிரம் கோடியாக உயர்த்தவேண்டும். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் தொடங்குவதற்கு அதிகாரிகள் மூலம் சங்கடம் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். ஒற்றை சாளர முறையில் அனுமதி தருவோம் என்கிறோம். ஆனால் அந்த நிலை இப்போது உள்ளதா? ஒரு முதலமைச்சர் என்ற முறையில் நான் இவ்வளவுதான் சொல்ல முடியும். 5 மாடிகள் கட்ட அனுமதி பெற்ற ஒரு ஓட்டல் நிறுவனத்தார் 6ஆவது மாடி கட்ட விரும்பி அனுமதி கேட்டார்கள். இதுதொடர்பான கூட்டத்தில் நானும் இருந்தேன். அந்த கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் 10 நிமிடத்தில் அனுமதி கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. அதுதொடர்பான கோப்பு அனைத்து துறைகளுக்கும் சென்று வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியிருந்தால் எப்போது அனுமதி கிடைக்கும்? 



அதிகாரிகள் காலங்கடத்துவதால் சம்பந்தப்பட்ட கோப்பு முடங்குகிறது. தொழில் தொடங்குபவர்கள் வட்டிக்கு பணம் வாங்கித்தான் தொழிலை தொடங்குகிறார்கள். அவர்களால் வட்டியை கட்ட முடியுமா? புதுவையில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது. ஆனால் மின்துறையினர் மின் இணைப்பு தருவதில்லை. சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை. அதை வேறு தொழில்களுக்கு மாற்றவேண்டும் என்றால் மத்திய அரசு அனுமதி தருவதில்லை. புதுவையில் புதியதாக தொழில் தொடங்க யார் வந்தாலும் மிக எளிமையாக அனுமதி தரவேண்டும். புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என  முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.


அதைத்தொடர்ந்து பேசிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதைதாம் ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக மேடையில் அமர்ந்திருந்த தொழில் மற்றும் வணிகத்துறை செயலாளர் வல்லவன், இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.