Pension Marital Discord Cases: அரசாங்க பணியில் உள்ள பெண் ஊழியர்கள் தங்களுக்கான ஒய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை முதன்மை வாரிசாக இனி பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் முறை:
மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50 ஆனது, ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற வழிவகை செய்கிறது. அந்த வகையில் அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது சார்பிலான குடும்ப ஓய்வூதியமானது, முதல் வாரரிசுதாரராக கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும். ஒரு வேலை அவர்கள் இல்லை என்றால் மட்டுமே அந்த குடும்ப ஓய்வூதியம் இரண்டாவது வாரிசுதாரரக்கு செல்லும். இந்நிலையில், அந்த விதிமுறைகளில் பெண் ஊழியர்களுக்கு என ஒரு பிரத்யேக, மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண் ஊழியர்களுக்காக வந்த மாற்றம்:
ஓய்வூதியம் பெறுவதற்கான வாரிசுதாரர் பரிந்துரை பட்டியலில் பொதுவாகவே முதலில் கணவன்/ மனைவியின் பெயர் தான் இருக்கும். ஆனால், திருமண வாழ்விற்கு பிறகு பிரிந்து வாழ்வது, விவாகரத்து பெற்று தனித்து வாழ்வது போன்ற சூழல் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் எங்களது குடும்ப ஓய்வூதியம் கணவருக்கு செல்வதில் விருப்பமில்லை. எனவே வாரிசுதாரர் பிரிவில் முதல் நபராக கணவரை தேர்ந்தெடுப்பதில் மாற்றம் செய்ய வேண்டும் என பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓய்வூதிய பரிந்துரை பட்டியலில் மாற்றம்:
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு பெண் ஊழியர் தனது குழந்தை/குழந்தைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான முதன்மை வாரிசுதாரர்களாக பரிந்துரைக்கலாம். ”இந்தத் திருத்தம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அல்லது இந்திய தண்டனையின் கீழ் உள்ள வழக்குகளில், விவாகரத்து மனு அல்லது மனு தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும், ஒரு பெண் அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியம் கணவருக்கு மாற்றாக தகுதியான குழந்தைக்கு வழங்க வழிவகை செய்கிறது” என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
அதோடு, பெண் அரசு ஊழியர் / பெண் ஓய்வூதியதாரர் தொடர்பான விவாகரத்து நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அல்லது தனது கணவர் மீது குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் அல்லது வரதட்சணையின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தால், தடைச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், "அத்தகைய பெண் அரசுப் பணியாளர்/பெண் ஓய்வூதியம் பெறுவோர், அவரது இறப்புக்குப் பிறகு, அவரது தகுதியுள்ள குழந்தை/குழந்தைகளுக்கு தனது குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை வைக்கலாம்" எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.