அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் தேதி ராம்லாலா சிலை (குழந்தை வடிவிலான ராமர்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்லாலாவின் மூன்று சிலைகள் இந்தியாவின் சிறந்த மூன்று சிற்ப கலைஞர்களால் செதுக்கப்பட்டது. இந்த கோயிலில் எந்த சிலை பிரதிஷ்டை செய்வது என்பது குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை என்ன ஆனது..? 


பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா கடந்த திங்கள் கிழமை (ஜனவரி 1) சிற்பி அருண் யோகிராஜுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அயோத்தியின் புதிய கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக அவரது சிலை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், கோயிலைக் கட்டும் ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இதுகுறித்து தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. 


இது தொடர்பாக சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பிற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறக்கட்டளை மூலம் முடிவு எடுக்கப்படும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


கோயில் கட்டுமானப் பணிகள் முதல் கட்டம்:


அறக்கட்டளை எந்த முடிவை எடுத்தாலும், அது உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என அறக்கட்டளை அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா பிடிஐயிடம் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலை கருவறையில் நிறுவப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் விழாவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கோயிலின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 


அயோத்தியில் கோயில்-மசூதி பிரச்சனையை தீர்த்த உச்சநீதிமன்றம்:


கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் அயோத்தி பகுதியில் உள்ள ராம்லாலா சிலை உள்ள தற்காலிக கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  கடந்த 2019ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, அயோத்தியில் பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதன்மூலம், அயோத்தியில் உள்ள கோயில்-மசூதி பிரச்சனையை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது. 


கருவறை சிலை:


அறநிலையத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கருவறைக்கு சிலையைத் தேர்ந்தெடுக்கும்போது சிலையின் ஆயுள், நுணுக்கங்கள் போன்ற சிறப்பான அம்சங்கள் குறித்த தொழில்நுட்ப அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்பட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.  


மூன்று சிற்பிகள் வெவ்வேறு கற்களில் கடவுள் ராமர் சிலைகளை செதுக்கியுள்ளனர். அவர்களில் இருவருக்கான சிலை கல் கர்நாடகாவில் இருந்து வந்தது. மூன்றாவது சிலைக்கான கல் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறையில் செய்யப்பட்டது. இந்த சிலைகள் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி சத்யநாராயண் பாண்டே மற்றும் கர்நாடகாவின் கணேஷ் பட் மற்றும் அருண் யோகிராஜ் ஆகியோரால் செதுக்கப்பட்டுள்ளன.
 
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, "மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் தயாரித்த ராமர் சிலை அயோத்தியின் பிரமாண்ட ஸ்ரீ ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநில ராம பக்தர்கள் அனைவரின் பெருமையும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகியுள்ளது. 'சிற்பி யோகிராஜ் அருண்' அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்றாஎ. 


அருண் யோகிராஜ் 'மைசூருவின் பெருமை' - பி.ஒய்.விஜயேந்திரா


எடியூரப்பாவின் மகனும், பாஜக மாநிலத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா, மாநிலத்தையும் மைசூருவையும் பெருமைப்படுத்தியதற்காக யோகிராஜை பாராட்டினார். அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி அருண் யோகிராஜின் ராம்லாலா சிலை நிறுவப்படும் என்பது கர்நாடகாவின் பெருமை, மைசூருவின் பெருமை என்று விஜயேந்திரர் கூறியிருந்தார். 


அருண் யோகிராஜ் சிலையை ஏற்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை


அருண் யோகிராஜ் கூறுகையில், ”'ராம் லாலா' சிலையை செதுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தான் செய்த சிலை ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்று கூறியிருந்தார். 


முன்னதாக, கேதார்நாத்தில் நிறுவப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை மற்றும் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நிறுவப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் சிலையை வடிவமைத்தது அருண் யோகிராஜ்தான்.