மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டலின் உட்கொள்வதால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்திய மருந்தக ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


 முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசான முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெஃபெனாமிக் அமில வலி நிவாரணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருந்தக ஆணையம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இந்திய பார்மகோவிஜிலன்ஸ் புரோகிராமின் ஆரம்ப ஆய்வு (பிவிபிஐ) வெளியிட்ட தரவுகளில்,  இந்த வலி நிவாரணி எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் பாதகமான எதிர்விளைவுகள் ஏற்படுவதாகவும், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் சிண்ட்ரோம் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய மருந்து எதிர்வினைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுள்ளது.  


ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் சிண்ட்ரோம் என்பது மருந்து உட்கொண்டு 8 வாரங்களில் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாப வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு, காய்ச்சல், தோள் எரிச்சல்  போன்ற அறிகுறிகள்  ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கையின்படி, "சுகாதார நிபுணர்கள், நோயாளிகள், மருந்து உட்கொண்ட பின்  பாதகமான மருந்து எதிர்வினையின் (adverse drug reaction ADR) சாத்தியக்கூறுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய எதிர்வினை ஏற்பட்டால், மக்கள் ஆணையத்தின் கீழ் உள்ள பிவிபிஐயின் தேசிய ஒருங்கிணைப்பு மையத்திற்கு www.ipc.gov.in என்ற இணையதளத்தில் அல்லது ஆண்ட்ராய்டு மொபைல் செயலியான ஏடிஆர் பிவிபிஐ மூலம் ஒரு படிவத்தைத் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல்லது பிவிபிஐ உதவி எண். 1800-180-3024 அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சகத்தின் ஒரு நிறுவனமான இந்திய மருந்தக ஆணையம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மற்றும் உட்கொள்ளும் அனைத்து மருந்துகளுக்கும் தரநிலைகளை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.